போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சரிவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ரவி ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது: நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் வறியநிலை மற்றும் விளிம்புநிலையில் இருப்பவர்கள். இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை. தமிழகத்தில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
@block_P@
வேலைவாய்ப்புகளின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றவர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள். தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து கண்ணியத்துடன் வாழ முடியாது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறது. block_P
தற்கொலை
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது. அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் தற்கொலை செய்கிறார்கள் என்பதோடு, குழுவாகத் தற்கொலை செய்வதிலும் நமது மாநிலம் அதிக மோசமான நிலையில் இருக்கிறது. அதாவது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
போதைப்பொருள்
போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு இளைஞர்கள் மாறிவரும் போக்கு நிலவுகிறது. ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மிக, மிக அதிகமான கவலையை அளிக்கின்றன. இந்த கொடிய அச்சுறுத்தலை தேவை மற்றும் விநியோகம் என இரு தரப்பிலும் சமாளிக்க வேண்டும். எனினும், இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.
அச்சம்
சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்சோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. 2024ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்சோ வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. நமது சகோதரிகளும் மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். அவர்கள், வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச்செய்து விடும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டுகடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.












மேலும்
-
வெண்டிலேட்டரில் இருக்கிறது திமுக ஆட்சி: இபிஎஸ் கிண்டல்
-
டில்லியில் கொட்டியது கனமழை; சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி; மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
-
இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு
-
பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!
-
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
-
பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் அறிவிப்பு