'விளைநிலத்தில் எண்ணெய் குழாய் முதல்வர் மீது விவசாயிகள் கோபம்'

திருப்பூர்: ''கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைத்தால், விவசாயிகளின் கோபத்தை முதல்வர் ஸ்டாலின் எதிர்கொள்ள நேரிடும்,' என, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.

கோவை மாவட்டம், இருகூரிலிருந்து, பெங்களூரு வரை, எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளை, பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல்., நிறுவனம், மேற்கொண்டுவருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.டி.பி.எல்., மாற்று வழி குழு சார்பில் நேற்று, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.

இருபதுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த, 300 பேர் திரண்டனர். எண்ணெய் குழாயை, நெடுஞ்சாலை வழியாக பதிக்க கோரி கோஷமிட்டனர்.

மதிப்பிழந்த நிலங்கள் இதில் பங்கேற்ற பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறியதாவது:

ஐ.டி.பி.எல்., நிறுவனம், கடந்த 22 ஆண்டுகள் முன்பு, திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதித்தது. அந்த நிலங்கள் மதிப்பிழந்தன; விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இப்போது, மற்றொரு குழாய் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதில், கோவை மாவட்டம் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டத்தில் முத்துார் வரை, 70 கி.மீ., மட்டும் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு கூடாது 'விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க அனுமதிக்கமாட்டேன்' என, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார். நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்காவிட்டால், முதல்வர் எப்போது கொங்கு மண்டலத்துக்கு வந்தாலும், விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

போலீஸ் பாதுகாப்போடு குழாய் பதிக்க எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு, அந்நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

கலெக்டர் மனிஷ் நாரணவரே, 'இக்கோரிக்கையை சென்னைக்கு அனுப்பி, சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று, அதனடிப்படையில் முடிவு செய்யப்படும்' என தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

Advertisement