மும்பையை மிரட்டும் கனமழை, வெள்ளம்; நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி

மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரே பெரும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. விக்ரோலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் பலியாகி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



வர்த்தக நகரான மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழை கொட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காணப்படுகிறது.


இன்று (ஆக.16) அதிகாலை முதல் மீண்டும் அதி கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், மும்பை காவல்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


மாநகரின் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி உள்ளது. எனவே முக்கியம் மற்றும் அவசர தேவை இல்லாத எந்த பயணத்தையும் மக்கள் மேற்கொள்ள வேண்டாம். அப்படியே வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்படுவோர் 100,112, 103 ஆகிய எண்களில் உதவிக்கு அழைக்கலாம்.


இவ்வாறு மும்பை காவல்துறை அறிவித்துள்ளது.


இந்நிலையில் இடைவிடாது பெய்துவரும் மழையில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விக்ரோலி மேற்கு பகுதியில் கனமழையின் போது, நிலச்சரிவு ஏற்பட்டதில் குடிசை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் காயம் அடைய, அவர்கள் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே, மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு இன்று முறையே ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பால்கர் பகுதியில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் இம்மழை ஆக.19ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement