ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறல் மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு சிறை

திருப்பூர்: திருப்பூரில், ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.



ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனஞ்செயன், 26; மத்திய பாதுகாப்பு படை வீரர். கடந்த 2019- நவ., மாதம் கேரளாவின் கண்ணனுாரில் இருந்து ஜார்கண்ட்டின் ஜாம்ஷெட்பூருக்கு ரயிலில் புறப்பட்டார்.


ரயிலில் கேரளாவின் பாலக்காடை சேர்ந்த ஆறு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்தனர். இதில், சிறுமிக்கு தனஞ்செயன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் ரயில்வே போலீசார் 'போக்சோ' வழக்குபதிந்து தனஞ்செயனை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா, தனஞ்செயனுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.

Advertisement