மீண்டும் சிறை சென்றார் கன்னட நடிகர் தர்ஷன்; ஜாமின் மனுவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

3

புதுடில்லி: கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவரை பெங்களூருவில் போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.


கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் தர்ஷன், சித்ரதுர்காவைச் சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தர்ஷன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.


அதேபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா உள்ளிட்ட சிலருக்கு ஜாமின் கிடைத்து.


இதையடுத்து, தர்ஷன் உள்பட 7 பேரின் ஜாமினை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோ அடங்கிய அமர்வு ,கொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஜாமின் வழங்கும் போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தர்ஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இன்று மாலை தர்ஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement