வெண்டிலேட்டரில் இருக்கிறது திமுக ஆட்சி: இபிஎஸ் கிண்டல்

6

குடியாத்தம்: ' திமுக ஆட்சி வெண்டிலேட்டரில் இருக்கிறது. மக்கள் கைவிட்டால் ஆட்சி குளோஸ்' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.

பிரசார சுற்றுப்பயணத்தில் இன்று குடியாத்தத்தில் அவர் பேசியதாவது: இங்கு விவசாயம், நெசவு, தீப்பெட்டி, பீடி ஆகிய தொழிலை நம்பித்தான் மக்கள் உள்ளனர். இங்கிருந்து லுங்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பல திட்டங்கள் கொடுத்தோம்.

கைத்தறி துணி தேங்கியிருந்த காலத்தில் மானியம் 300 கோடி ரூபாய்க்குக் கொடுத்தோம். ஜவுளி கைத்தறி விற்பனையை பெருக்க 2019ல் ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை, ஜவுளி பன்னாட்டுக் கண்காட்சி கோவையில் நடத்தினோம். சிறிய அளவு ஜவுளி பூங்காகொண்டு வந்தோம்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதில், 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர்.

இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். பெண்களின் கஷ்டத்தை பார்த்துக் கொடுக்க வில்லை, அதிமுக அழுத்தத்தைப் பார்த்தும், தேர்தல் காரணமாகவும் கொடுக்கிறார்.

திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை.
கொரோனா காலத்தில் பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்தோம். 5 ஆண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். நாமே அந்தக் கடனை கட்ட வேண்டும்.

73 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இருந்த கடனை விட
திமுக அரசின் கடன் சுமை அதிகம். எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

ஆட்சி செய்வது திமுக, நிதி வாங்கிக் கொடுத்தது அதிமுக. மக்களை ஏமாற்றுவதில் திமுக கைதேர்ந்தவர்கள். காலம் போன கடைசியில், வெண்டிலேட்டரில் திமுக ஆட்சி இருக்கிறது. மக்கள் கைவிட்டால் திமுக ஆட்சி குளோஸ்.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் முதல் மாநிலம் தமிழகம் என்றுதான் திமுக பெயர் பெற்றுள்ளது.


2026 சட்டசபை தேர்தல் முக்கியமான தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement