குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை; இந்தியர் உட்பட 67 பேர் கைது

12


குவைத்: குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை செய்த இந்திய, வங்கதேச மற்றும் நேபாள நாட்டினர் உட்பட 67 பேரை குவைத் போலீசார் கைது செய்தனர்.

மேற்காசிய நாடான குவைத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள், கட்டட தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மது விற்பனைக்கு தடை உள்ளது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மது குடித்த 63 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் இந்தியர்கள் 10 பேர் உட்பட 13 பேர் இறந்துவிட்டனர்.

இந்தியாவை சேர்ந்த 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். கள்ளச்சாராயம் கிடைத்தது எப்படி என்பது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.



தற்போது, சட்டவிரோத மது விற்பனை செய்த இந்திய, வங்கதேச மற்றும் நேபாள நாட்டினர் உட்பட 67 பேரை குவைத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதலில் நேபாள நாட்டை சேர்ந்த பூபன் லால் தமாங் கைது செய்யப்பட்டார்.


அவரிடம் இருந்து சட்டவிரோத மதுபான தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனால் என்ற நச்சுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மது விற்பனை செய்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த ஆறு தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். தற்போது தொழிற்சாலைகள் சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement