டில்லியில் சிறப்பான சாலை போக்குவரத்து; 2 புதிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த மோடி பெருமிதம்

25

புதுடில்லி: புதுடில்லி: கடந்த 11 ஆண்டுகளில் டில்லியில் சாலை போக்குவரத்து சிறப்பாக மாறி உள்ளது என இரண்டு புதிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.


டில்லியின் துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டில்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.

அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும். இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



துவாரகா விரைவுச் சாலையால், நொய்டா- டில்லி விமான நிலைய பயண நேரம் 20 நிமிடமாக குறையும். நெடுஞ்சாலை அமைக்க பணியாற்ற தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் அதிகாரிகள் நெடுஞ்சாலைகள் சிறப்பு குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்தனர்.



மொபைல்போன் உற்பத்தி




பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 11 ஆண்டுகளுக்கு முன்பு, நமக்குத் தேவையான பெரும்பாலான மொபைல்போன்களை இறக்குமதி செய்து வந்தோம். இன்று, பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 30-35 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறோம், மேலும் அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை செய்யும் தளமாக மாறி இருக்கிறது.


இவ்வளவு குறுகிய காலத்தில், யமுனை நதியிலிருந்து 16 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள், டில்லியில் 650 மின்சார பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள இரண்டு நெடுஞ்சாலைகள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

சிறப்பான சாலைகள்




டில்லியில் உள்ள மக்களின் அனைத்து சிரமங்களையும் நீக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் டில்லியை பாழாக்கி விட்டனர். கடந்த 11 ஆண்டுகளில் டில்லியில் சாலை போக்குவரத்து சிறப்பாக மாறி உள்ளது.

முன்னேற்றம்




ஆகஸ்ட் 15ம் தேதி, செங்கோட்டையில் இருந்து, இந்தியாவின் பொருளாதாரம், தன்னம்பிக்கை பற்றி நான் பேசினேன். இன்று, இந்தியா என்ன நினைக்கிறது. நண்பர்களே, உலகம் இந்தியாவைப் பார்க்கும்போது, அவர்களின் முதல் பார்வை நாட்டின் தலைநகரான டில்லியின் மீது விழுகிறது. அதனால்தான் டில்லியை ஒரு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக நாம் உருவாக்க வேண்டும். அதுவே வளர்ந்த இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அனைவரும் உணர்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement