குருகிராமில் யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

குருகிராம்: சர்ச்சைக்குரிய யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கொண்ட கும்பல், சம்பவத்தை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் சர்ச்சைக்குரிய யூடியூபரும் பிக் பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் 27, 2023 இல் பிக் பாஸ் ஓடிடி 2 ஐ வெல்வதற்கு முன்பு யூடியூபராகப் புகழ் பெற்றார். அவருக்கு ஆன்லைனில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் இசை வீடியோக்கள் மற்றும் படங்களிலும் தோன்றியுள்ளார்.

இருப்பினும், எல்விஷ் யாதவ் சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. கடந்த ஆண்டு, ரேவ் பார்ட்டிகளில் பாம்பு விஷத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் நொய்டா போலீசார் அவரை கைது செய்தனர். நாகப்பாம்பு விஷம் ஒரு பொழுதுபோக்கு மருந்தாக வழங்கப்படுவதாகவும், அதை பெறுவதற்கு இவர் உதவியதாக போலீசார் கூறினர். அதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் வழக்கில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

அவரது வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் பைக்கில் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யூடியூபர் குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர் மட்டுமே வீட்டில் இருந்தனர். பலமாடி வீட்டின் கீழ் தளங்களில் தோட்டாக்கள் பாய்ந்தன. தகவல் அறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் போலீஸ் அதிகாரி சந்தீப் குமார் கூறியதாவது:

இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை இந்த சம்பவம் நடந்துள்ளது, அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் செக்டார் 57 இல் உள்ள எல்விஷ் யாதவ் வீட்டில் 24 ரவுண்டுகள் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தோட்டாக்கள் வீட்டின் தரை மற்றும் முதல் தளங்களில் பாய்ந்தன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் வசிக்கும் ல்விஷ் யாதவ் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. தாக்குதல் நடந்தபோது அவரது பராமரிப்பாளரும் சில குடும்ப உறுப்பினர்களும் உள்ளே இருந்தனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போலீசார், தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, குடும்பத்தினரிடமிருந்து முறையான புகார் பதிவு செய்யப்பட்டவுடன் மேலும் விசாரணை நடத்தப்படும்
இவ்வாறு சந்தீப் குமார் கூறினார்.

எல்விஷ் யாதவின் தந்தை கூறுகையில்,

சம்பவத்திற்கு முன்பு எனது மகனுக்கு எந்த மிரட்டலும் வரவில்லை.எனது மகன் தற்போது ஹரியானாவுக்கு வெளியே உள்ளார்.

நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். முகமூடி அணிந்த மூன்று பேர் இருந்தனர். ஒருவர் பைக்கில் அமர்ந்திருந்தார், மற்ற இருவரும் கீழே இறங்கி வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் சுமார் 25 முதல் 30 ரவுண்டுகள் வரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

Advertisement