வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் தகவல்

1

புதுடில்லி: வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும்.



இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆகஸ்ட் 19ம் தேதி கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே கரையை கடக்கும். இதனால் பெரிய அளவில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு, தென் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement