பயிற்சியாளர் காம்பிர் மனதில் என்ன: இந்திய அணியில் மாற்றம் வருமா

மும்பை: இந்திய 'டி-20' அணியில் பெரும் மாற்றங்களை செய்ய காத்திருக்கிறார் பயிற்சியாளர் காம்பிர். மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன், பேட்டிங் வரிசையில் அனைத்து இடங்களிலும் விளையாடக்கூடிய 'ஸ்பெஷலிஸ்ட்' வீரர்களை தேர்வு செய்ய உள்ளார்.
ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்புக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட சூர்யகுமார் 34, உடற்தகுதியில் தேறிவிட்டார். கேப்டனாக நீடிக்கலாம்.


பயிற்சியில் ஏற்றம்: இருப்பினும் காம்பிர் மனதில் பல திட்டங்கள் உள்ளன. பயிற்சியாளராக பொறுப்பேற்ற சமயத்தில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் சூர்யகுமாரை கேப்டனாக நியமித்து அதிர்ச்சி அளித்தார். 'டி-20' கிரிக்கெட் நுணுக்கம் அறிந்தவர் காம்பிர். இவரது தலைமையில் பிரிமியர் தொடரில் கோல்கட்டா அணி இரு முறை கோப்பை (2012, 14) வென்றது. 2024ல் கோல்கட்டா அணி ஆலோசகராக, மீண்டும் கோப்பை வெல்ல உதவினார். இவரது பயிற்சியில் இந்திய 'டி-20' அணி 11 போட்டிகளில் 10ல் வென்றது. ஒன்றில் மட்டும் தோற்றது. வெற்றி சதவீதம் 90.91. சாம்பியன்ஸ் டிராபி வென்றது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது என பயிற்சியாளராக காம்பிர் ஜொலிக்கிறார்.

ஒரே கேப்டன்: இதனால் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை இறுதி செய்வதில் காம்பிர் ஆதிக்கம் செலுத்துவார். பிரிமியர் தொடரின் செயல்பாட்டின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு அமையும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக சுப்மனை நியமிக்க விரும்புகிறார். இவருக்கு பேட்டிங் ஆர்டர், 'பினிஷர்' போன்றவற்றில் அதிக நம்பிக்கை இல்லை. எந்த இடத்திலும் களமிறங்கி அசத்தக்கூடிய 'டி-20' ஸ்பெஷலிஸ்ட் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். உதாரணமாக ஷிவம் துபே, தேவைப்பட்டால் 'டாப் ஆர்டரிலும்' பேட் செய்வார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து தரமான 'ஆல்-ரவுண்டராக' மாற்றினார். நவீன 'டி-20' போட்டியில் ஒவ்வொரு பந்தும் முக்கியம் என கருதுகிறார். கடைசி கட்டத்தில் 'பினிஷராக' தடுமாறும் ரிங்கு சிங் நீக்கப்பட்டு, சுப்மன் கில் சேர்க்கப்படலாம். பும்ரா விளையாட தயார் என அறிவித்திருக்கும் நிலையில், காம்பிர் விரும்பும் புதிய 'டி-20' அணி தேர்வு செய்யப்படலாம்.

ஜெய்ஸ்வால் நிலை
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தேர்வு செய்துள்ள அணியில் அதிரடி பேட்டர் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் இடம் பெறவில்லை. இவர் கூறுகையில்,''சுப்மன் கில் ரன் மழை பொழிகிறார். மாற்று துவக்க வீரராக பயன்படுத்தலாம். விளையாடும் லெவனில் இடம் பெறுவது கடினம்,''என்றார்


கைப் தேர்வு செய்த 15 பேர் அணி:

சூர்யகுமார் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப், அர்ஷ்தீப், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, சுப்மன் கில், சிராஜ், ஜிதேஷ் சர்மா.

Advertisement