பிரவிஸ் ஒப்பந்த சர்ச்சை: அஷ்வின் விளக்கம்

சென்னை: ''எனது வீடியோவில் பிரவிஸின் பேட்டிங் திறமையை மட்டும் தான் பேசியிருந்தேன், அவரது ஒப்பந்த தொகையை அல்ல,'' என, அஷ்வின் தெரிவித்துள்ளார்.
பிரிமியர் லீக் 18வது சீசனில் (2025) சென்னை அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங் (ரூ. 2.2 கோடி) காயத்தால் பாதியில் விலகினார். இவருக்குப் பதில் தென் ஆப்ரிக்காவின் டிவால்டு பிரவிஸ் ரூ. 2.2 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார். இதுகுறித்து சென்னை அணியின் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வெளியிட்ட வீடியோவில், 'ஒப்பந்தத்தை விட கூடுதல் பணம் கொடுத்து தான் பிரவிஸ் வாங்கப்பட்டார்,' என தெரிவிக்க சர்ச்சை ஆனது.
இதற்கு சென்னை அணி நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், 'பிரவிஸின் ஒப்பந்தம், பிரிமியர் லீக் தொடரின் விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்தன. இதில் எவ்வித விதிமீறலும் இல்லை,' என, தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அஷ்வின், தனது வீடியோவில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில், ''எனது வீடியோவின் நோக்கம் பிரவிஸின் பேட்டிங்கை பற்றி பேசுவது மட்டும் தான். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையை பற்றி அல்ல. மற்ற அணிகளும் பிரவிஸை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிய நிலையில், சென்னை அணி சரியான நேரத்தில் வாங்கியது என்று தான் தெரிவித்திருந்தேன். ஆனால் எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், சரியான விஷயத்திற்கு கூட விளக்கம் தர வேண்டியுள்ளது. இதில் யாருடைய தவறும் இல்லை,'' என்றார்.