வட்டி தள்ளுபடி காலம் நிர்ணயம்; வீட்டுவசதி வாரியம் விளக்கம்

சென்னை: 'வாரிய திட்டங்களில், விலை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு தான், நிலுவைத்தொகை செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடிக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டது' என, வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.


வீட்டுவசதி வாரிய திட்டங்களில், தவணைத்தொகை நிலுவை வைத்துள்ளவர்கள், ஒரே சமயத்தில் அனைத்து தொகையையும் செலுத்தினால், அவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிலம் கையகப்படுத்தப்பட்ட நாளை விடுத்து, இறுதி விலை நிர்ணயிக்கப்பட்ட நாளில் இருந்து, வட்டி தள்ளுபடி வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக, வீட்டுவசதி வாரியத்தின் கோவை வீட்டுவசதி பிரிவு அளித்துள்ள விளக்கம்: வீட்டு வசதி வாரிய திட்டங்களில், 2015 மார்ச் 31ம் தேதிக்கு முன், தவணை காலம் முடிந்தவர்களுக்கு, தாமதத்துக்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.



இதில், அசலில் சேர்க்கப்படும் வட்டி தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை, வித்தியாசத்தின் மீதான வட்டி, ஆண்டுக்கு ஐந்து மாதம் என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம், 2026 மார்ச் 31 வரை அமலாகும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


நிலத்தின் இறுதி விலை வித்தியாச தொகைக்கான வட்டி தள்ளுபடி சலுகை என்பது, 2016 ஏப்., 1 முதல் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வாரியத்தின் இறுதி விலை நிர்ணயிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement