யூரியாவுடன் ரூ.700க்கு இணை இடுபொருட்கள்: அமைச்சர் உத்தரவை மீறி கடைகளில் நிர்பந்தம்

சென்னை: அமைச்சர் உத்தரவையும் மீறி, 'யூரியாவுடன் 700 ரூபாய்க்கு, இணை இடுபொருட்கள் வாங்க வேண்டும்' என, விவசாயிகளுக்கு உரக்கடைகளில், நிர்பந்தம் செய்யப்படுவதாக புகார் எழுந் துள்ளது.

டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், நெல் மட்டுமின்றி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

நன்கு வளர்ந்துள்ள பயிர்கள், யூரியா, பொட்டாஷ், கூட்டு உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளன.

ஆனால், பல தனியார் உரக்கடைகளில் யூரியாவுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. யூரியாவை தர வேண்டும் என்றால், 700 ரூபாய்க்கு பூச்சி மருந்துகள், பயிர் ஊக்கி உள்ளிட்ட, இணை இடுபொருட்களை வாங்க வேண்டும் என, நிர்பந்தம் செய்யப்படுகிறது.

இதனால், 270 ரூபாய்க்கு ஒரு மூட்டை யூரியா வாங்க, 700 ரூபாய்க்கு இணை இடுபொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல், வேளாண் துறையினர் மவுனம் காத்து வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

உரங்களுடன் மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆய்வு கூட்டங்களில் அறிவுறுத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால், நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

யூரியாவுடன் இணை இடுபொருட்கள் வாங்க, உரக்கடை உரிமையாளர்கள் வற்புறுத்துகின்றனர். அவர்களிடம் கேட்டால், உர தயாரிப்பு நிறுவனங்கள், அதை விற்க சொல்வதாக கூறுகின்றனர். எனவே, உர நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, இணை இடுபொருட்களை விற்க நிர்பந்தம் செய்வதை, அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement