பழைய பஞ்சாங்கம் தான்; விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை விமர்சனம்

31

தூத்துக்குடி: மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய், 'பழைய பஞ்சாங்கத்தையே பேசியுள்ளார்' என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.


செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; இன்று அவருடைய கட்சியை பெரிதுபடுத்துவது, கூட்டணிக்கு யாரை கொண்டு வருவது என்பதைத் தான் சிந்தனையை விஜய் வைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி தவறா? திமுக கூட்டணி தவறா? அதிமுக கூட்டணி தவறா? பாஜ கூட்டணி தவறா? என மற்றொருவரை குறை சொல்வதை விட, அவர் மீது நம்பிக்கையிருந்தால், அவரை நம்பி, தலைவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு விஜய் பேச வேண்டும்.

பலவீனம்





அரசியலில் எப்போதும் மற்றவர்களின் பலவீனத்தை விட தங்களின் பலத்தை பற்றி தான் பேசுவார்கள். ஆனால், மதுரை மாநாட்டில் விஜய் தங்களின் பலம் பற்றியே பேசவில்லை. மக்கள் பலத்தை தான் பார்ப்பார்கள். விஜய் பிறரின் பலவீனத்தை தான் பேசினார். ஆனால், அங்கு வந்திருந்த தொண்டர்கள் விஜய்யின் பலம் என்ன? எப்படி மாற்று கட்சி என்பதை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தனர்.


திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆரோக்யமான என்ன விஷயத்தை கையில் வைத்துள்ளீர்கள். நான் பார்த்த வரைக்கும் பழைய பஞ்சாங்கம் தான்.


புதிதாக கட்சியை ஆரம்பித்தால், பாஜ மற்றும் ஆளுங்கட்சியை திட்ட வேண்டும், நாங்க தான் மாற்று என்று சொல்ல வேண்டும். ஆனால், இவையெல்லாம் தாண்டி, ஆக்கப்பூர்வமாக என்ன கருத்துக்களை முன்வைத்தீர்கள் என்று தான் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.



பாசிச வெற்றி





இன்று பாசிசம் என்று பாஜவை விஜய் விமர்சித்தார். ஆனால், பாஜ தொடர்ச்சியாக தேசிய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. ஜெயிக்க முடியாத ஒடிசா உள்பட பல மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோம். தமிழக மக்களுக்கு தெரியும், பழைய பஞ்சாங்கத்தை பழைய டீக்கடையில் ஆத்துகிறார்கள் என்று.


பொதுமக்கள் பாஜவை சக்தி வாய்ந்த கட்சியாக பார்க்கிறார்கள். பிரதமர் மோடியை உலகத்திற்கு தேவைப்படும் தலைவராக பார்த்து மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.


18 சதவீதம்






கடந்த லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 18 சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள். இவங்க எல்லாம் ஓங்கோலில் இருந்து வந்தவர்களா? இவர்கள் எல்லாம் வெளிமாநில வாக்காளர்களா? தமிழக மக்கள், பாஜ மற்றும் பிரதமர் மோடி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர்.

விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும்.

ரேம்ப்வாக் வரும் போது கை தட்டலாம், ரேம்ப்வாக் முடிந்ததும் கிளம்பி போய்டலாம். ஆனால், இவை அனைத்தையும் ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும். உள்ளூர் வேட்பாளரா? இவர்கள் உண்மையாகவே 5 ஆண்டுகள் தாக்கு பிடிப்பார்களா? என அனைத்தையும் பார்த்து தான் மக்கள் வாக்களிக்கின்றனர். விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்போம்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக்க போறாங்க. இதுக்கு முன்பு யார் செய்தார்கள். ஏபிஜே அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது யார்? செங்கோலை பார்லிமென்டில் வைத்தது யார்? பழைய கதைகளை பேசாமல் 21ம் நூற்றாண்டு அரசியலுக்கு விஜய் வர வேண்டும்.

பயம்





தெனாலி பட கமல் போல, திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் பயம். மோடி, அமித் ஷாவை பார்த்தால் பயம். பார்லிமென்டில் புதிய சட்டம் வந்தால் பயம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் பயம். ஊழல் அரசியல்வாதிகள் 31வது நாளில் பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்றால் பயம். தொடர்ந்து பயத்திலேயே திமுக அரசும், கட்சியும் இருக்கிறது.

நெல்லையில் அமித்ஷாவை வரவேற்று திமுகவினர் போஸ்டர் ஒட்டப்போவதில்லை. போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றாலே எங்களைப் பார்த்து பயம் தானே. நிச்சயமாக பெரிய மாற்றம் வரும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

பாஜ உறுதி





விஜய் மீனவராகவும் படத்தில் நடித்துள்ளார். அப்போது எல்லாம் கச்சத்தீவை பற்றி விஜய் பேசியிருக்கிறாரா? கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேச ஆரம்பித்தார். அது இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம். 1972ம் ஆண்டு இவங்க கச்சத்தீவை கொடுத்து விட்டார்கள். 50 ஆண்டுகளாக யாரும் பேசவில்லை. இன்று நாம் பேச ஆரம்பித்துள்ளோம். நாங்கள் செய்வோம். எப்படி செய்வோம் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு விஷயத்தை கேட்கும் போது, இன்னொரு விஷயத்தை நாம் கொடுக்க வேண்டியது வரும். இதை அனைத்தையும் பார்த்து தான் ஒரு அரசு செயல்பட முடியும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது.

கச்சத்தீவு வேண்டும் என்பதில் பாஜ உறுதியாக உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வெள்ளை பேப்பரில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எழுதி கொடுத்து வந்துள்ளோம்.எங்களுடைய அதிகாரத்தில் இதனை நடத்துவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். விஜய் கச்சத்தீவை பற்றி பேசட்டும். ஆனால், இவ்வளவு நாள் எங்கு போனார்.


எம்ஜிஆர், காமராஜர் கொண்ட நிலைத்தன்மையால் அவர்களை பாராட்டுகிறோம். இதேபோன்று விஜய் 10 ஆண்டுகள் நீடித்தால், நான் ஏற்றுக் கொள்கிறேன். கட்சி ஆரம்பித்ததற்காக விஜய் பேசியதாகத் தான் நான் பார்க்கிறேன்.


தமிழக மீனவர்களை தொடர்ந்து மீட்டு கொண்டே தான் இருக்கிறோம். இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? விஜய் இப்படி பேசுவது எல்லாம் எனக்கு வருத்தம். அதே திமுக மொழியைத் தான் விஜய்யும் பேசுகிறார். அப்புறம் எப்படி விஜய்யை மக்கள் மாற்றாக பார்ப்பார்கள்.

இந்தியனாக..





பல்வேறு நாடுகளுக்கு சூட்டிங்கிற்கு பிரைவேட் ஜெட்டில் செல்லும் விஜய்க்கு, ஒரு இந்தியனாக அவருக்கு 2014க்கு பிறகு மரியாதை கூடியிருக்கா? குறைந்திருக்கா? இந்தப் பெருமை எப்படி வந்தது. இந்தியர் என்று சொன்னால் மேலை நாடுகள் ஏன் தலைநிமிர்ந்து பார்க்கிறார்கள். மோடி என்கிற ஒற்றை மனிதன் காரணம்.,

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற மசோதா எதிர்ப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement