பழைய பெட்டி கேமரா கலைஞன், டிகாம் சந்த்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான சவாய் மான் சிங் டவுன் ஹாலின் வெளிப்புறம்,சுற்றுலா பயணிகளின் வருகையால் எப்போதும் கலகலப்பாகக் காணப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் வித்தியாசமாகத் காணப்படுகிறார். காரணம் - அவர் பழங்கால மரப் பெட்டி கேமராவை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க அழைக்கிறார்.

அவர் பெயர் டிகாம் சந்த். அவரை அங்குள்ளவர்கள் அன்புடன் “ஜெய்ப்பூரின் பழைய புகைப்படக் கலைஞன்” என்று அழைக்கிறார்கள்.
Latest Tamil News
டிகாம் சந்தின் கையில் இருப்பது 1860- களைச் சேர்ந்த மரப்பெட்டி கேமரா. ஒரு பக்கம் பெரிதாகத் திறக்கும் அந்தப் பெட்டிக்குள், லென்ஸ், கண்ணாடிகள், இருட்டடிப்பு அறை என அனைத்தும் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமராவில் கருப்பு-வெள்ளைப் படங்களையே எடுக்க முடியும். ஆனால் அந்தப் படங்களின் தனித்தன்மையும், மேன்மையும் மறுக்க முடியாதவை.

இந்த கேமரா முதலில் டிகாம் சந்தின் தாத்தா பஹாடி மாஸ்டர் ஜி அவர்களிடமிருந்தது. பின்னர் அவரது மகன், இப்போது பேரன் டிகாம் சந்தின் கைகளில் உள்ளது. மூன்று தலைமுறைகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த மரப்பெட்டி கேமரா, இன்று குடும்ப பாரம்பரியத்தின் அடையாளமாகத் தொடர்கிறது. டிகாம் சந்த், இதைப் புகைப்படக் கருவி மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு பொக்கிஷம் என்றே கருதுகிறார்.
Latest Tamil News
இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கும் நிலையில், டிகாம் சந்தின் கேமரா முன் நிற்கும் ஒருவர், சில பல நிமிடங்கள் பொறுமையாக இருந்தால்தான் ஒரு படம் எடுக்க முடியும். ஆனால் அந்த அனுபவம் மிகவும் விசேஷமானது.

படம் எடுக்கும் முன் வாடிக்கையாளர் கவனமாக அமரவைக்கப்படுவார். பிறகு டிகாம் சந்த், அந்தப் பெட்டியின் பின்புறம் சென்று தன்னையும் கேமராவையும் கருப்பு துணியால் மூடிக்கொள்கிறார். சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளரிடம் அசையாமல் இருக்கக் கூறி, லென்ஸைத் திறந்து மூடுகிறார். பின்னர் எடுத்த படம் ரசாயனக் கலவையில் மூழ்கி வெளிப்படும். அப்பொழுது உருவாகும் கருப்பு-வெள்ளைப் படம், ஒரு நினைவுப் பொருளாக மட்டுமல்ல; அது ஒரு கலைப்பொருளாகவும் மாறுகிறது.

புகைப்படம் எடுக்க காத்திருக்கும் அந்த நிமிடங்களும், புகைப்படம் கையில் வரும் மகிழ்ச்சியும் வாடிக்கையாளருக்கு ஒரு காலப்பயண அனுபவத்தை தருகிறது.

“இது எனக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, என் தாத்தாவிடமிருந்து வந்த ஒரு பாரம்பரியம். உலகம் முழுவதும் டிஜிட்டல் ஆனாலும், என் கேமரா இன்னும் மக்களின் இதயத்தை வெல்லுகிறது. இந்த பாரம்பரியத்தை முடிந்தவரை நீட்டிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” என்கிறார் டிகாம் சந்த்.

புகைப்படங்கள் என்பது எப்போதும் பழமையான விஷயங்களை இனிதாக அசைபோட வைப்பதுதான், அந்தப் பழமை மாறாத கேமராவில் எடுக்கும் போது அந்த அனுபவம் இன்னும் இனிமையாகிறது.

டிகாம் சந்தின் மரப்பெட்டி கேமரா ஓர் சாதனம் மட்டும் அல்ல; அது காலத்தைக் கடந்து நிற்கும் புகைப்படக் கலையின் மரபுச் சின்னம்.

- எல். முருகராஜ்

Advertisement