பீஹாரில் லாலு கட்சியில் அதிருப்தி; பிரதமர் விழாவில் பங்கேற்ற ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்

பாட்னா: பீஹாரில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி எம்எல்ஏக்கள் இருவர் கலந்து கொண்டது, அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநிலத்தில் 2ம் முறையாக இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கயாஜியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது மேடையில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் விபா தேவி. நவாடா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானவர். இவரது கணவர் ஆர்ஜேடியின் மாஜி எம்எல்ஏ ராஜ் பல்லப் யாதவ். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்.
மற்றொருவர் பிரகாஷ் வீர். இவர் ராஜவுலி என்ற தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆனவர். இவர்கள் இருவரும் மேடையில் இருந்தது தற்போது பீஹார் மாநில அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது;
பொதுவாக,அரசு திட்டங்கள் அது பிரதமர் கலந்து கொண்டாலும் சரி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டாலும் சரி. அந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அரசு விழா எங்கு நடக்கிறதோ அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ அல்லது எம்பி ஆகியோர் கலந்துகொள்ள அழைப்பிதழில் பெயர் சேர்க்கப்படும். அவர்கள் நிகழ்வில் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்படும்.
ஆனால், விபா தேவி மற்றும் பிரகாஷ் வீர் இருவரின் பங்கேற்பு அப்படி அல்ல. எம்எல்ஏக்கள் இருவரின் வருகை என்பது அக்கட்சியினுள் (ஆர்ஜேடி) கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி உள்ளதை காட்டுவதாக இருக்கிறது.
கட்சியின் முன்னணி தலைவர்கள் பாஜவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதே கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை சாதாரணமாக கடந்து போக முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
அதேநேரத்தில் சிட்டிங் எம்எல்ஏக்கள் இருவரும் கட்சிக்கு எதிராக பல முறை அறிக்கைகளை வெளியிட்டும், கருத்துகளை கூறியும் வருகின்றனர். எனவே இவர்கள் இருவரின் வருகை கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும், பாஜவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதை குறிப்பால் உணர்த்துவதாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் இருவர் கலந்து கொண்டது ஏன் என்பது பற்றிய விளக்கத்தை பாஜ எம்பி விவேக் தாகூர் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
இந்த நிகழ்விற்கு அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர். அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தது. ஏராளமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பலர் கலந்து கொண்டனர். கட்சி சார்பின்றி அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
கட்சி பேதம் பார்க்காமல் அவர்களும் வந்திருக்கின்றனர். வராதவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். யார் வந்தார்கள், வரவில்லை என்பது தான் கேள்வி. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வரவில்லை. இது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு விவேக் தாகூர் கூறினார்.
மேலும்
-
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்
-
இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு
-
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை; ரஷ்யா திட்டவட்டம்
-
ஆக.30ல் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; அதிமுக அறிவிப்பு
-
விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம்; மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ!
-
போதைக்கு எதிரான போரில் தமிழகம் முதலிடம் என ஸ்டாலின் நகைச்சுவை; அன்புமணி கிண்டல்