பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

22

புதுடில்லி: பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை ஆதார் அடிப்படையில் மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தல் கமிஷனிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

இதை முன்னிட்டு, மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், பீஹாரில் இருந்து நிரந்தரமாக குடியேறி வேறு மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்தவர்களின் பெயர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 65 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.90 கோடியில் இருந்து, 7.24 கோடியாக குறைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விபரங்களை சுப்ரீம்கோர்ட் உத்தரவு படி தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:


* பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை ஆதார் அடிப்படையில் மீண்டும் சேர்க்க வேண்டும்.



* வாக்காளர்களுக்கு உதவ பூத் கமிட்டி முகவர்களுக்கு அரசியல் கட்சிகள் உத்தரவிட வேண்டும்.


* 11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக தர வேண்டும் என வாக்காளர்களை கட்டாயப்படுத்த கூடாது.


* அதேபோல், விண்ணப்பம் நேரில் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. ஆன்லைனில் பெற அறிவுறுத்தல் வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement