நகை அணிந்து வந்தால் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்

2

விருதுநகர்: நகை அணிந்து வந்தால் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது என்று மூதாட்டிகளிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலகலவென நகைச்சுவையாக பேசினார்.



விருதுநகர் மாவட்டம் என்.சுப்பையாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த மூதாட்டிகள் சிலர் வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம், எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.


அப்போது அவர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இப்படி மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டு வந்தால் ரூ.1000 கிடைக்காது என்று கிண்டலடித்தார். அவரின் கிண்டலை கேட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.


அமைச்சர் இப்படி கிண்டலாக பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்போர், ஒரு அமைச்சர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசலாமா? உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன் அல்லது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி இருக்கலாம்.


அதை விட்டுவிட்டு, இதுபோன்று பேசுவது சரியாகுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இன்னும் சிலரோ நகைச்சுவையாக பேசியதை பொருட்படுத்துவது ஏற்புடையது அல்ல என்று கருத்துக் கூறி வருகின்றனர்.

Advertisement