8 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. எண்ணூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வடபழநி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்

எண்ணூரில் 14 செ.மீ., மழை



எண்ணூரில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ., தாம்பரம், ஆர்.கே., பேட்டையில் 9 செ.மீ, வில்லிவாக்கம், பூந்தமல்லியில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை



'வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடமேற்கு வங்கக் கடலில், ஒடிஷா - மேற்கு வங்க கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் உருவாகக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் லேசான மழை உருவாக வாய்ப்புள்ளது; வரும், 28 வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement