திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்; முதல்வருடன் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

புதுச்சேரி : திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய நிதி ஒதுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

வில்லியனுார், திருக்காமீஸ்வரர் கோவில், தர்மபால சோழ மன்னரால் 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோவிலில் உள்ள தேர் மிகவும் பழமையானதால், வல்லுநர் குழு ஆய்வு செய்து, புதிய தேர் செய்வதற்கான ஒப்புதல் வழங்கினர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழிகாட்டுதலின்படி கோவில் நிர்வாகம், தேர் கமிட்டி, ஊர் பொதுமக்கள், வல்லுநர் குழு உதவியுடன் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய தேர் செய்வதற்கு ஸ்தபதியை தேர்வு செய்ய டெண்டர் விடுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, முதல்வர் ரங்கசாமி தேர் செய்வதற்கான நிதியை விரைவில் அளிப்பதாக உறுதியளித்தார். சந்திப்பின்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் செல்வராஜ், பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் பிரபு, தினகர், வனத்துறை இணை இயக்குநர் ராஜ்குமார், கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் உடனிருந்தனர்.

Advertisement