மாநில அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்

புதுச்சேரி : பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சுகாதாரத்துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் கடற்கரை சாலையில் நடந்தது.

புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் மாவட்ட அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயத்தை சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் அருள் விசாகன் ஆகியோர் கொடி யசைத்து துவக்கி வைத்தனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துணை இயக்குநர் வைத்தியநாதன், சங்க இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்கள் பிரிவில் சாரதா கங்காகரன் கல்லுாரி மாணவர் பிரதீப் வர்மா முதலிடம், மாகே காந்தி அரசு கல்லுாரி மாணவர் ஆதின் இரண்டாமிடம், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மாணவர் நாஜிஹ் ஷரர் மூன்றாமிடம் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தியா முதலிடம், பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி இரண்டாமிடம், மாணவி பாரதி மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 20 மாணவர்களுக்கு ரூ.1,000 ஆறுதல் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், வெற்றி பெற்ற முதல் இரண்டு மாணவ, மாணவிகள் வரும் அக்டோபர் மாதம் நாகாலாந்தில் ந டக்கும் தேசிய அளவிலான விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அருள்விசாகன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement