புதுச்சேரி கடற்கரை அழிவின் தொடக்கத்தில் உள்ளதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை; சமூக ஆர்வலர் ஜோஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு

புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை அழிவின் தொடக்கத்தில் உள்ளதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு மையம் சார்பில், 5வது சர்வதேச இளைஞர் மன்ற விழா நடந்தது. விழாவில், இந்தியாவில் இருந்து சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசியதாவது:

புதுச்சேரி கடற்கரை எவ்வளவு அழகுடன் இருந்ததோ, அதே அளவுக்கு இப்போது அழிவின் தொடக்கத்தில் உள்ளது. கடல் நீர்மட்டம் அதிகரித்து, முன்னோர்கள் பயன்படுத்திய நிலங்கள் அரித்து சென்றுக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து குடிக்க தகுதியற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று பல கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர் குளிப்பதற்கு கூட உகந்ததாக இல்லை.

இதனை பார்த்துக் கொண்டு புதுச்சேரி மக்கள் பொறுமையுடன் தான் இருக்கின்றனர். இவற்றை சரி செய்வதாக அரசு நீண்ட காலமாக வாக்குறுதி அளித்து வருகிறது. அவை எப்போது நடக்கும், எப்போது பலன்தரும் என்பது தெரியாது. இதற்கு தீர்வாக அறிவியல் ஆய்வுகளுடன், உயிரியல் நீர் சுத்திகரிப்பு முறைகளை நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இது தொழில் நுட்பத்தின் காலகட்டம். இந்த தொழில்நுட்பங்கள் உங்களின் பணியாளாராக இருக்கட்டும்; உங்களை ஆள அனுமதிக்காதீர்கள். உங்களின் புத்திகூர்மைக்கு மாற்றாக தொழில்நுட்பங்கள் இருக்கும் என்று ஒருநாளும் எண்ணி விடாதீர்கள்.

இன்று, பல இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கலாம் என, நினைக்கின்றனர். தேர்தலின் போது மட்டுமே அரசியல் கட்சிகளால் இளைஞர்கள் நினைவு கூறப்படுகின்றனர். இது ஜனநாயகத்திற்கான துரோகம். நீங்கள் நாளைக்கான தலைவர்கள் அல்ல. நீங்கள் இன்றைக்கான தலைவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement