'காது, கழுத்துல நகை இருந்தா மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது' அமைச்சர் கிண்டலால் பெண்கள் எரிச்சல்

16


சாத்துார்: “காது, கழுத்துல நகை இருந்தால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது,” என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், பெண்களிடம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே என். சுப்பையாபுரம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, முள்ளிச்செவல் பகுதிக்கு சென்ற அவர், அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

அப்போது அங்கு வந்திருந்த பெண்கள் அமைச்சர் ராமச்சந்திரனிடம், தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என, முறையிட்டனர். அப்போது, அவர்களில் ஒரு மூதாட்டியின் காதில் கம்மல் அணிந்திருந்ததை பார்த்த ராமச்சந்திரன், அதை சுட்டிக்காட்டி, ''இப்படி காது, கழுத்துல நகை போட்டு வந்து உரிமை தொகை கேட்டீங்கன்னா கிடைக்காது,” என்றார்.

மேலும், “ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், காதுல கம்மல் இருக்கு; கழுத்துல செயின் இருக்கு என்று ரிப்போர்ட் எழுதி விடுவர். பிறகு எப்படி உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்,'' எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

'கஞ்சிக்கே வழி இல்லை' அதற்கு அந்த மூதாட்டி, ''காதுல இருக்கிற இந்த கம்மல் மட்டும் தான்யா என்கிட்ட இருக்கு; கஞ்சிக்கு வழியில்லை; வேணும்னா கழட்டிக்கங்க. எனக்கு உரிமைத் தொகை தாங்க'' என்றார். உடனே, ''கொடுக்க சொல்வோம்'' என பதிலளித்தபடியே, அங்கிருந்து ராமச்சந்திரன் புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து, “தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை கடந்த 50 மாதங்களாக வழங்கி வருவதாக தி.மு.க., அரசு கூறி வரும் நிலையில், 'கஞ்சிக்கே வழி இல்லை' என கூறிய அந்த மூதாட்டி, தமிழக அரசு வகைப்படுத்திய தகுதி பட்டியலில் இல்லையா?” என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.

பா.ஜ., கண்டனம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

பெண்களிடம், 'மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால், 1,000 ரூபாய் கொடுக்க மாட்டோம்' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறியது, அரசியல் நாகரிமகற்ற செயல். 'அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை' என வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சியில் அமர்ந்ததும், 'தகுதியான பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை' என, பாதி பெண்களை பட்டியலில் இருந்து தி.மு.க.., அரசு நீக்கியது. இப்போது, 'நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது' என மீதி பெண்களையும் விரட்ட பார்க்கிறது.

ஏற்கனவே, 'ஓசி' எனவும்; '1,000 ரூபாயில் கிரீம், பவுடர் எல்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க' எனவும்; பணம் வரவில்லை என்ற பெண்களை, 'மெண்டல்' எனவும், நாக்கில் நரம்பின்றி, தி.மு.க.,வினர் வசைபாடுகின்றனர். இதை இனியும் அனுமதிக்க முடியாது. பெண்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement