மணல் விற்பனை முறைகேடு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

3


மதுரை: திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சேலம் கிழக்கு மாவட்ட மணல் மற்றும் எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கார்த்திக், 'திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு மணல் விற்பனை கிடங்குகளில் சட்டவிரோத மணல் விற்பனை, மோசடி குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, பொது நல வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரிக்க முடியாது. ஏனெனில் ஆவணங்களை ஆய்வு செய்தல் மற்றும் விசாரணை தேவை. குவாரி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை. கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது முறைகேடு அல்லது சட்டவிரோதத்தை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



மணல் கடத்தல் ஒரு குற்றம் மட்டுமல்ல. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட முடியும். இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு தரப்பு, 'முறைகேடு விபரங்களை வழங்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்' என தெரிவித்தது.


ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தால், தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளிக்க மனுதாரருக்கு உரிமை உண்டு. புகார்கள் பெறப்பட்டால் குற்றச்சாட்டுகளின் தன்மை, ஆவணங்களை சரிபார்த்து, விசாரித்து, சட்டப்படி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தர விட்டனர்.

Advertisement