கண்மாயில் மண் திருட்டு விசாரணை அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளியது தொடர்பான விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து டி.எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

அழகாபுரி விடியல் வீரபெருமாள் தாக்கல் செய்த பொதுநல மனு:

சாத்துார் அருகே இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் விவசாயத்திற்காக வண்டல், களி மண் அள்ள ஒருவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதை தவறாக பயன்படுத்தி கிராவல் மண் அள்ளியதாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

சட்டவிரோதமாக மண் அள்ளுவதில் தொடர்புடைய ஒருவர் தனது டைரியை கீழே போட்டுவிட்டார்.

விசாரிப்பதற்காக அது விருதுநகர் டி.எஸ்.பி.,க்கு அனுப்பப்பட்டது.

அதில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை மறைப்பதற்காக பல்வேறு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததை எழுதி வைத்துள்ளார்.

வருவாய்த்துறையின் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின் அது திருப்பப் பெறப்பட்டது. தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அள்ளுவதை தடுக்க கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

நீதிபதிகள்,'விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து டி.எஸ்.பி., ஆக.26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.

Advertisement