அரசின் அமுதசுரபி ஆகிறது அந்தமான்; துவங்கியது மத்திய அரசின் எரிவாயு தேடல்

அந்தமானை பாருங்கள் அழகு... என அந்த அழகிய தீவை எட்டியிருந்து அரசு பார்த்து வந்த நிலை மாறிவிட்டது. மாறாக, அந்தமான் நிகோபார் தீவுகளை, இந்திய எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிக்கக்கூடிய முன்னணி இடமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் எரிசக்தி தேவையில், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நிலையை மாற்ற, அந்தமானின் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடலில் அரசு இறங்கியிருக்கிறது. இதற்காக, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, ஆழ்துளையிடும் பணியை துவங்கியிருக்கிறது.
ஆசியான் நாடுகள் மொத்த எரிசக்தி தேவையில் ஓரளவை சமாளித்து, இறக்குமதி செலவை குறைப்பது மட்டுமின்றி, துாய்மையான எரிசக்தி உற்பத்தியில் தன் உறுதியை உலகுக்கு நிலைநாட்டவும் அந்தமானை ஆர்வத்துடன் பார்க்கிறது அரசு. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்புடன் இணைந்து, மாசுபடுத்தும் நிலக்கரி மின்சார உற்பத்தியில் இருந்து திரவநிலை இயற்கை எரிவாயுவான எல்.என்.ஜி., மற்றும் ஹைட்ரஜன் ஆகிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது.
இதில், உள்நாட்டு கவனம் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவில் தன்னை துாய எரிசக்தி கூட்டாளியாக நிலை நிறுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டுகிறது. நிலக்கரி மின்சாரத்தை கைவிட இயலாத ஆசியான் மண்டலத்தில், அந்தமான் கடல் பகுதியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு படிமத்தை, அவசியமான எரிசக்திக்கு பாலமாக இந்தியா பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இது, ஆசியான் நாடுகளின் எரிசக்தி பரவலாக்கலுக்கு மட்டுமின்றி; கிழக்கு நாடுகள் மீதான கொள்கை மற்றும் மண்டல ஒருங்கிணைப்பில் தன் நோக்கத்தை இந்தியா அடையவும் ஆதரவாக அமையும். பிரகாசமான எதிர்காலம் கொரோனா காலத்துக்கு பின் மாறியுள்ள பொருளாதார மாற்றங்களால், ஏசியானின் ஜி.டி.பி., 3 சதவீதம் சரிவு கண்டுள்ளது. 2022ல் ஆசியான் நாடுகளின் எரிசக்தி பயன்பாடு, 15.20 சதவீதம் அதிகரித்து 43.20 கோடி டன்களானது.
2023ல் பெரும்பாலான ஆசியான் நாடுகள், இயற்கை எரிவாயு இறக்குமதியை அதிகரித்ததால், ஏற்றுமதி 13 சதவீதம் சரிந்தது. 2027ல் ஆசியான் நாடுகளின் எரிவாயு ஏற்றுமதி முற்றிலும் நின்று போய், இறக்குமதி நாடுகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் எரிசக்தி தேவை, உலகின் மொத்த தேவையில் 25 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மியான்மர், வங்கதேசம் நாடுகளுக்கு, திரிபுரா வழியாக குழாய் வாயிலாக என்.எல்.ஜி., வினியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால், என்.எல்.ஜி., ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியா உருவாகும். வியட்னாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகியவையும் நிலக்கரியில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான எரிசக்திக்கு மாற விரும்புவதால், இந்தியாவுக்கான எதிர்காலம் பிரகாசமாக அந்தமான் துரப்பண பணிகள் கைகொடுக்கும்.
நம்பிக்கை முயற்சி அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் தேடல் இன்று, நேற்றல்ல; 1980களிலேயே 'இந்திரசாஸ்த்ரா' என்ற பெயரில் துவங்கியது. அப்போதே, 1.80 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், 2016ல் 'ஹைட்ரோகார்பன் எக்ஸ்புளோரேஷன் அண்டு லைசென்சிங் பாலிசி' சுருக்கமாக 'ஹெல்ப்' என்ற பெயரில் மீண்டும் தேடல் துவங்கியது.
கயானாவின் கச்சா எண்ணெய் தேடலுக்கு கிடைத்த வெற்றியுடன் இதை ஒப்பிட்டுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவின் 80 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு இறக்குமதியை குறைக்கக்கூடிய அளவில், 1.84 லட்சம் கோடி லிட்டர் கச்சா எண்ணெய், அந்தமான் கடல் பகுதியில் கிடைக்கக்கூடும் என்றார். நம்பிக்கை தரும் இந்த முயற்சியை துவங்க, ஏன் இவ்வளவு காலதாமதம் என அவர் கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டின் எரிசக்தி தேவை கணிசமாக அதிகரிப்பதை சமாளிக்கவும், அந்தமானின் பங்களிப்பு உதவும். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தன் ராஜாங்கரீதியான கூட்டணியை விரிவுபடுத்தவும், எரிசக்தி ஏற்றுமதியில் கணிசமான வருவாய் ஈட்டுவதன் வாயிலாக, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவை குறைக்கவும், அந்தமானை அமுதசுரபியாக பயன்படுத்த திட்டமிடுகிறது மத்திய அரசு.
துாய்மையான எரிசக்தி உற்பத்தியில் தன் உறுதியை உலகுக்கு நிலைநாட்ட திட்டமிடுகிறது அரசு. அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் தேடல் இன்று, நேற்றல்ல; 1980களிலேயே 'இந்திரசாஸ்த்ரா' என்ற பெயரில் துவங்கியது. அப்போதே, 1.80 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு கிடைத்ததாக கூறப்படுகிறது.











மேலும்
-
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
-
2 நாள் பயணமாக குஜராத் செல்கிறார் மோடி; ரூ.5,400 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
-
தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார்
-
வரதட்சணை விவகாரத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை: தப்பி ஓடிய கணவன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
-
பீஹாரில் 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்
-
ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; சாதித்து காட்டியது இஸ்ரோ!