ஓசூரில் 2,000 ஏக்கரில் விமான நிலையம்; சூளகிரி தாலுகாவில் அமைக்க இடம் தேர்வு

3

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்து, முக்கிய தொழில் நகரமாக, ஓசூர் உருவெடுத்து வருகிறது.


போக்குவரத்து நெரிசல் அங்கு ஏற்கனவே, வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் உள்ள நிலையில், மின் வாகனம், பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் துவங்க முன்வந்துள்ளன.




தற்போது, ஓசூருக்கு செல்லும் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரநிதிகள், கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு விமானத்தில் செல்கின்றனர். பின், அங்கிருந்து சாலை மார்க்கமாக, ஓசூர் செல்கின்றனர்.



பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



இதற்காக அம்மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கும் அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின், 2024 ஜூனில் வெளியிட்டார்.



விமான நிலையம் அமைக்க, ஓசூருக்கு அருகில் உள்ள தனியார் விமான ஓடுபாதை, சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டையில் உள்ள தோகரை அக்ரஹாரம் உள்ளிட்ட, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அங்கு, ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. அதில், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி தாலுகாக்களில், இரு இடங்கள் தேர்வாகின.




இந்த இரு இடங்களிலும், உயரமான கட்டடங்கள் அதிகமாக எங்கு உள்ளன என்பதை அறியும் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.



அடுத்த கட்ட பணி ஓசூர் விமான நிலையத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ள இரு இடங்களில், ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.



அதில், கிருஷ்ணகிரி - பெங்களூரு நெடுஞ்சாலையில், சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.



அந்த இடத்தில், ஓசூர் விமான நிலையம் அமைக்க அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிப்பது உள்ளிட்ட, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement