அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்

பல்லடம் : பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம், தேவனஹல்லி வரை, எரிவாயு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் உள்ளது. இதை, விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்றும், நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் கிராமத்தில், குழாய் பதிப்புக்காக, அதிகாரிகள் அளவீடு பணி மேற்கொள்ள வந்தனர். தகவல் அறிந்து வந்த விவசாயிகள், அதிகாரிகள் வந்த வாகனங்களை சிறை பிடித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 'விளை நிலங்கள் வழியே குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம். இதற்கிடையே, அனுமதி இல்லாமல், அளவீடு பணிக்கு வந்தது ஏன்? குழாய் பதிப்பு, புறவழிச் சாலை என, அடுத்தடுத்து விவசாய நிலங்களை பறித்து கொண்டால் நாங்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது?

திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், திட்டங்களுக்காக விளைநிலங்களை பூஜ்ஜியமாக்குவதா? நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு பணியை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ள நிலையில், அதிகாரிகள் ஏன் இவ்வாறு விவசாயிகளை சிரமப்படுத்த வேண்டும்? விவசாயிகள் அனுமதியின்றி எந்த ஒரு பணியையும் செய்யக்கூடாது. அனுமதியின்றி விளை நிலத்துக்குள் நுழைந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்றனர்.

விவசாயிகளிடம் துணை தாசில்தார் பெரியசாமி பேச்சு நடத்தினார். இதையடுத்து, அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால், சுக்கம்பாளையம் கிராமத்தில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

Advertisement