இந்திய அணி அறிவிப்பு * 'நேஷன்ஸ்' கால்பந்து தொடருக்கு...

பெங்களூரு: மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர், ஆக., 28-செப்., 8ல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்க உள்ளது.
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இரு பிரிவிலும் இரண்டாவது இடம் பெறும் அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும். உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் ஆக. 29ல் தஜிகிஸ்தான், அடுத்து செப். 1ல் வலிமையான ஈரான் (20 வது இடம்), செப். 4ல் ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது. இதற்கான 23 பேர் கொண்ட இந்திய அணியை புதிய பயிற்சியாளர் காலித் ஜமில், நேற்று அறிவித்தார்.
கோல் கீப்பர்களாக குர்பிரீத் சிங் சாந்து, அம்ரிந்தர் சிங், ஹிரிதிக் திவார் இடம் பெற்றனர். ராகுல் பெக்கே, நாவோரம் சிங், அன்வர் அலி, சந்தேஷ் ஜின்கன் உள்ளிட்டோர் தற்காப்பு வீரர்களாக தேர்வாகினர். மத்திய களத்தில் சுரேஷ் சிங், ஜீக்சன் சிங், போரிஸ் சிங், ஆஷிக் குருனியன், உடாண்டா சிங் உள்ளனர். முன்கள வீரர்களாக இர்பான், மான்விர் சிங், ஜிதின், சாங்டே, விக்ரம் பிரதாப் இடம் பெற்றனர்.

சிறந்த வீரர் செத்ரி

பயிற்சியாளர் காலித் ஜமில் கூறுகையில்,'' ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக, 'நேஷன்ஸ்' போட்டியில் பங்கேற்கிறோம். மற்றபடி, சிங்கப்பூர் (அக்., 9, 14) அணிக்கு எதிராக ஆசிய போட்டியில் 'சீனியர்' சுனில் செத்ரி 41, கட்டாயம் பங்கேற்பார். அவரை விட சிறந்த வீரர் வேறு யாரும் இல்லை,'' என்றார்.

Advertisement