இங்கிலாந்தில் 2 சீக்கிய டாக்ஸி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்

லண்டன்: இங்கிலாந்து ரயில் நிலையத்திற்கு வெளியே வயதான இரண்டு டாக்ஸி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


இங்கிலாந்து ரயில் நிலையத்திற்கு வெளியே இரண்டு வயதான சீக்கிய டாக்ஸி டிரைவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இவர் இனவெறி காரணமாக தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் சத்னம் சிங், 64, மற்றும் ஜஸ்பிர் சங்கா, 72 என அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக 17 வயது சிறுவனும் 19 மற்றும் 25 வயதுடைய இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர் என பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆளான 64 வயதான சத்னம் சிங் கூறுகையில், ''அவர் என்னை தூக்கி எறிந்து குத்தியபோது நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்'' என்றார்.



இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 72 வயதான ஜஸ்பிர் சங்கா கூறியதாவது: எனக்கு இரண்டு விலா எலும்புகள் உடைந்தன. நான் என்னை தற்காத்துக் கொள்ள முயன்றேன். அது மிக விரைவாக நடந்தது, நான் தரையில் அமர்ந்து இருந்தேன். ஒரு கும்பல் என்னை மிதித்து சரமாரியாக தாக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement