மீராபாய் சானு புதிய சாதனை * காமன்வெல்த் பளுதுாக்குதலில் தங்கம்

ஆமதாபாத்: காமன்வெல்த் பளுதுாக்குதலில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு.
ஆமதாபாத்தில் காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. 30 நாடுகளில் இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கினார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 31.
முதலில் நடந்த 'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ எடை துாக்கினார். அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 109 கிலோ துாக்கினார். மொத்தம் 193 எடை துாக்கிய மீராபாய் சானு, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் பளுதுாக்குதலில் இது புதிய சாதனை (இதற்கு முன் 179) ஆனது.
மலேசியாவின் ஐரேன் ஹென்றி (161), வேல்சின் நிக்கோல் ராபர்ட்ஸ் (150) வெள்ளி, வெண்கலம் வென்றனர். யூத் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் சவுமியா, 177 கிலோ எடை துாக்கி (76+101) தங்கம் கைப்பற்றினர்.
பிரீத்திஸ்மிதா சாதனை
யூத் 44 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரீத்திஸ்மிதா பங்கேற்றார். 2 வயதில் தந்தையை இழந்த இவர், 'ஸ்னாட்ச்' பிரிவில் 63 கிலோ துாக்கினார். 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 87 கிலோ துாக்கி, யூத் காமன்வெல்த்தில் சாதனை படைத்தார். மொத்தம் 150 கிலோ துாக்கி, தங்கம் கைப்பற்றினார். 2024ல் இவர் உலக யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் இந்தியாவின் தர்மஜோதி மொத்தம் 224 கிலோ (97+127) எடை துாக்கி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில், தேசிய விளையாட்டு சாம்பியன் ரிஷிகன்டா, 271 கிலோ (120+151) எடை துாக்கி தங்கம் கைப்பற்றினார்.

ஒலிம்பிக் போட்டிக்குப் பின்...
டோக்கியோ (2021) ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார் மீராபாய் சானு. அடுத்து பாரிசில் (2024) ஒரு கிலோ குறைவாக துாக்கியதால் நான்காவது இடம் (199) பிடித்து பதக்கத்தை இழந்தார். இதன் பின் காயத்தால் எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதிலிருந்து மீண்ட இவர், 2018க்குப் பின், நேற்று களமிறங்கி, தங்கம் கைப்பற்றினார்.

Advertisement