கச்சா எண்ணெய் இறக்குமதி 18 மாதங்களில் இல்லாத சரிவு

புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.70 சதவீதம் குறைந்து, 1.86 கோடி டன்னாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நுகர்வு குறைவு கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்ச இறக்குமதியாகும். கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 4.30 சதவீதம் குறைந்து உள்ளது.

அதே நேரத்தில், கடந்த மாதம் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியம் பொருட்களின் இறக்குமதி 12.80 சதவீதம் சரிந்து, 43.10 லட்சம் டன்னாகவும்; ஏற்றுமதி 2.10 சதவீதம் குறைந்து, 50.20 லட்சம் டன்னாகவும் இருந்தது. எரிபொருள் நுகர்வை பொறுத்தவரை, 4.30 சதவீதம் குறைந்து 1.94 கோடி டன்னாக இருந்தது.

வரி விதிப்பு அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, இறக்குமதி குறைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாளை முதல் கூடுதல் வரி நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், இந்திய நிறுவனங்கள், எந்த நாட்டில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ, அங்கிருந்து இறக்குமதி செய்யும் என, ரஷ்யாவுக்கான இந்திய துாதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement