மும்பையில் அக்., 27 - 31 வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு: ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு

சென்னை: ''இந்திய கடல்சார் உச்சி மாநாடு, மும்பையில் வரும் அக்., 27ம் தேதி முதல் 31 வரை நடைபெற உள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, 'சாகர்மாலா' போன்ற திட்டங்களை மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயல்படுத்தி வருகிறது.

இது தவிர, கடல்சார் உச்சி மாநாடுகள் நடத்தி, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. மத்திய கப்பல் துறையில் ஐந்து புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து துறையை வலுப்படுத்தவும், அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், கப்பல்களின் சேவையை அதிகரிக்கவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்திய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்., 27ம் தேதி முதல் 31 வரை ஐந்து நாட்கள் மும்பையில் நடக்கிறது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் உட்பட கடல்சார் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நாட்டின் முக்கிய தளமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


* 100 நாடுகளில் இருந்து 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

* 500 அரங்குகளுடன், கண்காட்சிகள் இடம்பெற உள்ளன.

* 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் எதிர்பார்ப்பு.

* 200க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றுவர்.


@block_P@

18 நகரங்களில் வாட்டர் மெட்ரோ

கடல் மற்றும் ஆறுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில், நீர் வழி போக்குவரத்தை மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், வாய்ப்புள்ள பகுதிகளில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளது. அதன்படி, இந்தியாவில் 18 நகரங்களில் வாட்டர் மெட்ரோ போக்குவரத்தை கொண்டு வர உள்ளது. மும்பை, கொல்கட்டா, கொச்சி, வாரணாசி, கோவா, மங்களூரு, ஒடிஷா, கவுஹாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.block_P

Advertisement