பைக் மீது லாரி மோதி விபத்து 'ரேபிடோ'வில் பயணித்தவர் பலி

மடிப்பாக்கம், மேடவாக்கம்- - பரங்கிமலை பிரதான சாலையில், டாரஸ் லாரி மோதிய விபத்தில், 'ரேபிடோ' பைக்கில் பயணித்த பீஹார் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேந்திரசிங், 52. இவர், குப்தாபவன் இனிப்பகத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பெரும்பாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம், குப்தா பவனுக்கு செல்ல, 'ரேபிடோ' ஆன்லைன் பைக் டாக்ஸி புக் செய்தார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த விஸ்வா, 23, என்பவர், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டருடன் சென்றார். இருவருவம்,'ஹெல்மெட்' அணிந்தபடி, துரைப்பாக்கம் - -பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக மேடவாக்கம்- - பரங்கிமலை சாலை அடைந்து மடிப்பாக்கம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

மடிப்பாக்கம் அருகே பைக்கை முந்தி சென்ற டாரஸ் லாரி உரசியதில், இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில், நரேந்திரசிங் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு காரணாக டாரஸ் லாரி ஓட்டுநரான திரிசூலத்தைச் சேர்ந்த கணேசன், 47, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement