பாதுகாப்பு இல்லாமல் வடிகால் பணி: செத்துப்போனா பார்த்துக்கலாம்... சென்னை மாநகராட்சி அலட்சியம்

- நமது நிருபர் - சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாமல் நடந்து வரும் நிலையில், யாரேனும் விபத்தில் சிக்கி இறந்தால் பார்த்து கொள்ளலாம் என்கிற நிலையில் மாநகராட்சி செயல்படுகிறது.
சென்னை மாநகராட்சியில், 3,040 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், இதுவரை, 1,100 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் துார்வாரப்பட்டுள்ளது. அதேபோல், புதிய மழைநீர் வடிகால், பழைய மழைநீர் வடிகால் புனரமைப்பு, மழைநீர் வடிகால் இணைப்பு உள்ளிட்ட பணிகள், 1,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நடந்து வருகிறது.
அதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில், பணி நடந்து வருகிறது.
பல இடங்களில் சாலையோரங்களில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள், ஆபத்தான நிலையில் செங்குத்தாக நிற்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தவறி கீழே விழுந்தால், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
சில இடங்களில், இரும்பு கம்பிகள் தடுப்புக்காக வைக்கப்பட்டு இருந்தாலும், வலுவற்ற நிலையில் உள்ளன. இதில் உரசினால் கூட, மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது.
மழைநீர் வடிகால் பணி நடைபெறும் எந்த ஒரு இடத்திலும், நிலையான பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாத நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இரும்பு கம்பிகள் குத்தி உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மட்டுமே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி, மாநகராட்சி அதிகாரிகள் கடமையை முடித்து கொள்கின்றனர்.
மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
தற்போது, மாநகராட்சியில், போரூர், சூளைமேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் மழைநீர் வடிகால் பணி நடைபெறுவது, வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள், முறையாக தடுப்புகள் அமைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தடுப்புகள் அமைக்கப்படாமல் பணிகள் நடைபெறும் இடங்கள் குறித்து, 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளித்தால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மேலும்
-
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி
-
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!
-
காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமிக்க முடிவு
-
சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு வரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை