விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்



தர்மபுரி, விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு ‍திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து, அருகம்புல், எருக்கம் பூ மாலை உள்ளிட்டவைகளை சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர்.

குமாரசாமிபேட்டை சிவசக்தி விநாயகர், அப்பாவு நகர் கற்பக விநாயகர் வெள்ளி கவசத்திலும், செல்வகணபதி தங்கக்கவசத்திலும், கடைவீதி செல்வ விநாயகர் ராஜ அலங்காரத்திலும் அருள்பாலித்ததனர்.
தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட அருகே, தர்மபுரி மோட்டார் மெக்கானிக் சங்கம் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், அங்குள்ள கடை உரிமையாளரான இஸ்லாமியர், விநாயகருக்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார்.
* அரூரில், பெரியார் நகர், பாட்சாபேட்டை, முருகர் கோவில் தெரு, திரு.வி.க., நகர், வர்ணதீர்த்தம் மற்றும் அரூர் சுற்று வட்டாரத்தில் உள்ள அச்சல்வாடி, செக்காம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, செல்லம்பட்டி, கொங்கவேம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 71 சிலைகள் அமைத்து பூஜை நடந்தது. வீடுகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கோட்டப்பட்டி பகுதியில், 20, கோபிநாதம்பட்டியில், 17, சிலைகள் வைக்கப்பட்டன. மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
* பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, கடத்துார், உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் கோவிலில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு சுண்டல், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பொம்மிடியில், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சிலை வைத்து நடந்த வழிபாட்டில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்டோர் வழிபட்டனர். இதில் வணிகர்கள், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், ஏ.பள்ளிப்பட்டி பகுதிகளில், பா.ஜ., சார்பில் சாய்பாபா கோவில் வளாகத்தில் ஒரு சிலை உள்ளிட்ட, 167 இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* பாலக்கோடு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், 9 அடி விநாயகர் உருவ சிலை அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவல், கொழுக்கட்டை படையலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement