வீதியெங்கும் விநாயகர் சிலை; திருப்பூரில் கொண்டாட்டம்

திருப்பூர்; விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது; வீடுகளில், சிலைகளை வைத்து, குடும்பத்தினர் பக்தியுடன் வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் கோவில்கள் மாவிலை தோரணம் கட்டி, வாழை மரம் நட்டும், வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

விநாயகர் விரும்பும், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், தேங்காய் லட்டு, மாவு லட்டு, மோதகம் போன்ற பட்சணங்கள் படைத்து வழிபாடு நடந்தது. காலை முதல், மதியம் வரை, பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

எருக்கன் பூ மாலை, அருகம்புல் அணிவித்து, வழிபட்டனர். கோவில்களில், பிரசாதத்துடன், அன்னதானமும் வழங்கப்பட்டது. திருப்பூர் எஸ்.ஆர்., நகர் நவக்கிரஹ ரத்தின விநாயகர் கோவில், டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவில், சபாபதிபுரம் வரசித்தி விநாயகர் கோவில் உட்பட, அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று, சதுர்த்தி விழா வழிபாடு விமரிசையாக நடந்தது.

சதுர்த்தி பூஜை நடந்து வரும் கோவில்களில், விநாயகர் சதுர்த்தி விழா பூஜைகள், நேற்று முன்தினம் இரவே நடத்தப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணியுடன் சதுர்த்தி திதி நிறைவடைந்ததால், நேற்று முன்தினம் கோவில்களில் மாலை நேர பூஜைகள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு வீடுகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து, குடும்பத்துடன் இணைந்து வழிபட்டனர். பதார்த்தங்களை படைத்து, தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். விநாயகர் அகவல் பாடியும், சிறுவர், சிறுமியர் வழிபட்டனர்.

Advertisement