தனியார் பஸ்சில் அரை டிக்கெட் இல்லை

மானாமதுரை : மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி செல்லும் தனியார் பஸ்களில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை டிக்கெட்டிற்கான கட்டணம் வசூல் செய்யாமல் முழு கட்டணம் வசூல் செய்வதால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாகவும், 5வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது 130 செ.மீ., உயரத்திற்குள்ளவர்களுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டடுள்ளது.

மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி, மற்றும் பரமக்குடி செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்களில் அரசு உத்தரவை மீறி பயணிகளிடம் 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கூட முழு கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மானாமதுரை பயணிகள் கூறியதாவது:

நேற்று மானாமதுரையிலிருந்து காலை குடும்பத்தோடு மதுரைக்கு அரசு பஸ்சில் சென்ற போது எனது 11 வயது மகனுக்கு அரை டிக்கெட்டிற்கான கட்டணம் வசூல் செய்தனர்.ஆனால் மாலை 5:40 மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி சென்ற தனியார் பஸ்சில் எனது மகனுக்கு முழு கட்டணம் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறிய போது, நாங்கள் வரும் போது அரசு பஸ்சில் அரை டிக்கெட் கட்டணம் தான் வசூல் செய்தனர் என்ற போது அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, முழு கட்டணம் தான் எடுக்க வேண்டும் என்று அடாவடியாக வசூல் செய்தனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசு உத்தரவை மீறும் இது போன்ற தனியார் பஸ்களில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement