அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி

கோவை; பி.எஸ்.ஜி.ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்களுக்கான, 59வது அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த, 23 முதல் நேற்று வரை நடந்தது.

பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லுாரி உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், தேசிய அளவில் புகழ்பெற்ற எட்டு அணிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறைகளில் விளையாடின. இறுதிப்போட்டியில், சென்னை இந்தியன் வங்கி அணியும், திருவனந்தபுரம், கேரள மாநில மின் வாரிய அணியும் விளை யாடின. இந்தியன் வங்கி அணி, 68-50 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக, மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து, லோனாவாலா இந்திய விமானப்படை அணி விளையாடியது. இந்திய விமானப்படை அணி, 81-73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு, முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி.சுழல் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கேரள மாநில மின் வாரிய அணிக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற, இந்திய விமானப்படை அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காம் இடம் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்தியன் வங்கி அணி வீரர் பாலாவுக்கு, சிறந்த விளையாட்டு வீரர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை கலெக்டர் பவன்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement