அமெரிக்காவுக்கு பெரிய கும்பிடு போடுகிறார் மோடி! முக்கியமான 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு

2

புதுடில்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாற்று வழிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, 40 நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். அது கடந்த 7 ம் தேதி அமலுக்கு வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலால், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

தடையை மீறி, ரஷ்யாவிடம் இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றம்சாட்டி, மேலும் 25 சதவீத வரி விதித்தார் டிரம்ப். இதனால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி 50 சதவீதமாக உயர்ந்தது. பிரேசிலுடன் சேர்த்து, அமெரிக்காவின் அதிகபட்ச வரி விதிப்புக்கு உள்ளானது இந்தியா.

டிரம்ப் விதித்த 50 சதவீத வரி, நேற்று அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளித்திருந்த ஆர்டர்களின் பேரில் தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு நிறுவனங்கள் வலியுறுத்தின. சில நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்தன. இதனால், திருப்பூர் உள்ளிட்ட ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கும் நிலையால், ஆலைகள், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து, ஏற்றுமதியாளர்கள் அதிகமுள்ள திருப்பூர், சூரத் உள்ளிட்ட இடங்களில் மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் முகாமிட்டு, நிலைமையை சமாளிப்பதற்கான மாற்று வழிகள் குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அமெரிக்க ஏற்றுமதி பாதிப்புக்கு இணையாகவோ, அதை விட கூடுதலாகவோ ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 40 நாடுகளில் கண்காட்சி, கருத்தரங்கு, வர்த்தகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சக அதிகாரி ஒருவர் டில்லியில் நேற்று தெரிவித்தார்.

இந்த 40 நாடுகளில், இலக்குடன் கூடிய அணுகுமுறை, தரமான, நிலையான, புதுமையான ஜவுளிப் பொருட்கள் வணிகத்தில் இடம்பிடித்தல், ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைத்தல், இந்திய தூதரகங்கள் வாயிலாக அணுகுவது என திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா 220க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே ஏற்றுமதி செய்து வரும் நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 40 நாடுகளில் இந்தியப் பொருட்களின் இறக்குமதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு கருதுகிறது. இந்த நாடுகளில் தற்போது இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 5 - 6 சதவீதமாக உள்ளது.

ஆனால், இந்த 40 நாடுகள், ஜவுளி, ஆடைகளை மொத்தம் 51.33 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்கின்றன. இதனால், இந்தியாவின் சந்தைப் பங்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் 4.17 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

இந்த 40 நாடுகளில், நிகழ்ச்சிகள், வர்த்தக சந்திப்புகள், கண்காட்சிகள், தூதரக தொடர்புகள் வாயிலாக, ஜவுளி, ஆடைகள் உள்ளிட்ட இந்திய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்தால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி சரிவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டிவிட முடியும் என அரசு உணர்ந்துள்ளதாக, அந்த அதிகாரி தெரிவித்தார்.

@block_B@

முக்கிய நாடுகள்

பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா.

அதிக பாதிப்புள்ள துறைகள்

ஜவுளி, ஆடைகள், ஆபரணக்கற்கள், நகைகள், இறால், தோல் பொருட்கள், காலணி, ரசாயனங்கள், மின்சாதனங்கள், இயந்திரங்கள்.block_B

அதிக பாதிப்புள்ள துறைகள் ஜவுளி ஆடைகள் ஆபரணக்கற்கள், நகைகள் இறால் தோல் பொருட்கள் காலணி ரசாயனங்கள் மின்சாதனங்கள் இயந்திரங்கள்

Advertisement