அவசர கால நிவாரணங்களை விரைந்து அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா வலியுறுத்தல்

கோவை; 'அமெரிக்க வரி விதிப்பு, இந்திய ஜவுளித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவசர கால நிவாரண அறிவிப்புகளை உடனடியாக வழங்குவது மட்டுமே ஜவுளித்துறையை காப்பாற்றும் நடவடிக்கையாக இருக்கும்' என, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'சைமா' வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, 'சைமா' தலைவர் சுந்தரராமன் கூறியதாவது:

இந்தியாவுக்கான பெரும் வெளிநாட்டு சந்தையாக அமெரிக்கா உள்ளது. ஆண்டுக்கு 36 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதியில் சுமார் 11.5 பில்லியன் டாலர்கள் ஜவுளி ஏற்றுமதியாக உள்ளது.

இதில், 65 சதவீதம் ஆயத்த ஆடைகள், 25 சதவீதம் பெட்ஷீட் போன்றவை. பெட்ஷீட்70 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு செல்கிறது. இதில், நமது பிரதான போட்டியாளர் பாக்.,கிற்கு 19 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் தேவை அமெரிக்க வரி உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் சற்று நம்பிக்கை அளித்த நிலையில், அமெரிக்கா வரியை உயர்த்தி விட்டது.

இதனால் புது ஆர்டர்கள் வரவில்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் விலை குறைப்பு கேட்கிறார்கள். நிறைய நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. பருத்தி ஆடைகள், கோடை காலத்துக்கான ஆர்டர். இவை, ஆக., - செப்., மாதங்களில் வரத்துவங்கும். இது தற்போது நின்று விட்டது.

மாற்று சந்தை வாய்ப்புகளுக்கு போதுமான அவகாசம் இல்லை. ஒரே நாளில், மாற்று சந்தைகளை உருவாக்கி விட முடியாது. நான்கைந்து ஆண்டுகளாவது ஆகும்.

நாம் கேட்பது ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பு அல்ல. பேரிழப்பைச் சமாளிப்பதற்கான நிவாரணம்.இந்த இழப்பால், ஜவுளி நிறுவனங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துதல், ஊதியம், மின் கட்டணம் என ஏராளமான செலவுகள் உள்ளன. செயல்பாட்டு முதலீடு திரும்ப வராவிட்டால், நிர்வகிக்க முடியாது. எனவே, அசல் தொகையை திருப்பிச் செலுத்துவற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க வரி உயர்வால் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க, ஏற்றுமதி வரிச் சலுகை, ஜி.எஸ்.டி., குறைப்பு, 2 ஆண்டுக்கு க்யூ.சி.ஓ., சட்டத்தில் இருந்து தளர்வு அளித்து, பாலியஸ்டர், விஸ்கோஸ் இறக்குமதிக்கு அனுமதித்தல் போன்றவை செய்ய வேண்டும்.

இரு ஆண்டுகளில் சரி செய்யலாம் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் போன்றவற்றில், 30 சதவீதம் கூடுதல் கடன் வழங்க வேண்டும். வட்டி 5 சதவீதமாக இருத்தல் வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இச்சலுகை வழங்கப்பட்டிருந்தாலும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அந்த வரம்பைத் தளர்த்தி, தேவைப்படும் பெரு நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும்.

உள்நாட்டு சந்தையிலும் வளர்ச்சி இல்லை. எனவே, ஏற்றுமதி சலுகைகளை 8 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஏற்றுமதிக் கடன் 5 சதவீதத்தில் வழங்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டால், அமெரிக்கா உயர்த்திய 25 சதவீத கூடுதல் வரியில் 15 சதவீதம் வரை சமாளிக்க முடியும். அப்படியும், 10 சதவீதம் கூடுதல் சுமை இருக்கும்.

அதை சரிக்கட்ட, ஐரோப்பிய நாடுகளுடனான பேச்சுவார்த்தையை வேகப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடனும் பேச வேண்டும். பிறநாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை, உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு செய்தால், இந்த பேரிழப்பை 2 ஆண்டுகளில் சரி செய்யலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

@block_B@

'ஒருங்கிணைந்த நடவடிக்கை'

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான 'பியோ' தலைவர் ரால்ஹான் அறிக்கையில், 'கடன் உதவி, வட்டி சலுகை, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கூடுதல் அவகாசம் உள்ளிட்ட நிதி ஆதரவு முடிவுகள், பி.எல்.ஐ., திட்டங்களை விரிவுபடுத்துதல், ஐரோப்பிய ஒன்றியம், ஓமன், சிலி, பெரு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தங்களை துரிதப்படுத்துதல் உள்ளிட்டவற்ற மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்து செல்ல, அரசு மற்றும் தொழில் அமைப்புகள் இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கை துவக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.block_B

@block_B@

தமிழக அரசு செய்ய வேண்டியது

''தமிழக அரசு, சோலார் மேற்கூரைக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது; வழக்கு மேல்முறையீட்டைத் திரும்பப் பெற வேண்டும். காற்றாலை நிலுவைகளில் கவனம் செலுத்த வேண்டும். மின்சார கொள்முதல் மீதான சர் சார்ஜ், கூடுதல் சர்சார்ஜ்களில் இருந்து விலக்களிக்க வேண்டும். இ--டேக்ஸ் தளர்வளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார் சுந்தரராமன்.block_B

Advertisement