தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை, தனக்கும், தொண்டர்களுக்கும் துாக்கம் இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த ஜூலை 7 முதல் ஆக., 25-ம் தேதி வரை, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என, எழுச்சி பயணம் மேற் கொண்டேன்.
கோவையில் துவங்கி திருச்சி வரை 40 நாட்கள், 24 மாவட்டங்களில், 118 சட்டசபை தொகுதி களில், 6,728 கி.மீ., பயணம் செய்து, 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களும், பெரும் வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் நடக்கும் அட்டூழியங்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நிறுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து, மக்கள் கவலை தெரிவித்தனர்.
மக்கள் கோபம் தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தி.மு.க., அரசு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தவறி விட்டது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல், முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்.
பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியை பிடித்த பின், கோமா நிலைக்கு தி.மு.க., அரசு சென்று விட்டது. தமிழகத்தை பீடித்திருக்கும் துயரத்திற்கு, 2026ல் முடிவுரை எழுதுவோம்.
குடும்ப ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைப்போம். மோசமான விளம்பர மாடல் 'போட்டோ ஷூட்' தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அ.தி.மு.க.,வை அரியணையில் ஏற்றுவோம்.
என் எழுச்சி பயணத்திற்கு கிடைக்கும் பேராதரவையும், திரளும் மக்கள் வெள்ளத்தையும், முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
வெல்வது உறுதி அதனால் தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் நினைத்துக்கொண்டு நான் பேசுவதாகக் கூறுகிறார்.
நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன். முன்கள வீரனாக, என் எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை, அ.தி.மு.க., தொண்டர்களுக்கும், எனக்கும் துாக்கமில்லை. வரும் 2026ல் அ.தி.மு.க. வெல்வது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.









