தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு

56


சென்னை: '' 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, இபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

சந்தர்ப்பம்



பின்னர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவர் மூப்பனார். அவருக்கு நாடு அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியது. பிரதமராக வேண்டிய நிலையில் ஆதரவு தராமல் அதனை தடுத்தனர். அந்த சக்தி யார் என்று நமக்கு தெரியும்.

துரோகம்



தமிழ், தமிழ் கலாசாரம் என்று திரும்ப திரும்ப பேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். இதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும். இதனை மறக்கவும் முடியாது. ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழத்திற்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன். அரசியல் இங்கே பேச கூடாது. இங்க புகழஞ்சலி செலுத்த வந்து இருக்கிறோம்.

நல்லாட்சி



ஒரு சின்ன அரசியல் பேசுகிறேன் என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். தமிழகத்தில் அந்த மாதிரி, அவரது கொள்கைக்கு ஏற்ற மாதிரி, நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது. 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனை பூர்த்தி செய்ய கூடிய சக்தி நாம் எல்லோரிடமும் இருக்கிறது. தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்.


நமது கடமை



போதைப்பொருள் வேண்டாம். சாராயம் தண்ணீரை விட கேடு கெட்ட நிலையில் பரவுகிறது. மக்கள் எல்லோருக்கும் தொண்டு செய்வது நமது கடமை. இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும்.


@quote@இந்த கூட்டணியின் மூலம் மக்களுக்கு நாம் தொண்டு ஆற்ற வேண்டும். இதில் சின்ன சின்ன உட்பூசல் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். quote

முதிர்ச்சி அடைந்த, பக்குவமான தலைவர்கள் இருக்கிறார்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நல்லாட்சி அமைய உழைக்க வேண்டும். இதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு நாம் அளிக்கும் பெரும் அஞ்சலி. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement