நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்

11

புதுடில்லி: சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது.


உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. தொற்றுநோய்கள், பயங்கரவாதம், பிராந்தியங்களுடனான மோதல்கள் என எந்த சூழலாக இருந்தாலும் இந்த நூற்றாண்டு நிலையற்றது, சவாலானது என நிரூபிக்கப்பட்டு உள்ளது.


இத்தகைய சூழல்களின் போது, சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது என்பது தெளிவாகிறது. தற்போதைய வாழ்வின் நிர்பந்தமாகவும் ஆகிவிட்டது. நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு இவை இரண்டிற்கும் தற்சார்பு என்பது அவசியம்.


2014ம் ஆண்டு பாதுகாப்புத்துறையின் நமது ஏற்றுமதி என்பது ரூ.700 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ரூ.24,000 கோடியாக எட்டி சாதனை படைத்துள்ளது. இறக்குமதியாளராக மட்டும் அல்லாமல் இந்தியா ஏற்றுமதியாளராக மாறிவிட்டதையே இது காட்டுகிறது.


நம் நாட்டு உபகரணங்களை கொண்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கியது, தொலைநோக்கு பார்வை, தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இன்றி எந்த பணியும் வெற்றி பெற முடியாது என்பதையே காட்டுகிறது.


இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement