ஒட்டியம்பாக்கம் துணை தலைவர் மண் திருட்டில் சிறையில் அடைப்பு

பெரும்பாக்கம்;தனியாருக்கு சொந்தமான காலி மனைகளில் மண் திருட்டில் ஈடுபட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த ஒட்டியம்பாக்கம் துணை தலைவர் லோகிதாஸ் கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரி அடுத்த, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 56. இவருக்கு சொந்தமான காலி மனை, ஒட்டியம்பாக்கம் பகுதியில் உள்ளது.

இரு மாதங்களுக்கு முன் சென்று பார்த்தபோது, இவரது இடத்தில் 60 அடி ஆழம் உடைய கிணறும், 20 அடி ஆழம், 20 அடி அகலத்தில் பள்ளமும் தோண்டப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கண்ணன், அங்கிருந்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர், தி.மு.க.,வைச் சேர்ந்த லோகிதாஸிடம் கேட்டுள்ளார். அதற்கு லோகிதாஸ், 'இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன்' எனக்கூறி, கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதேபோல், கண்ணன் இடத்தை ஒட்டியுள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவரது காலி மனையிலும், ஒட்டியம்பாக்கம் துணை தலைவர் லோகிதாஸ், கிணறு மற்றும் பள்ளம் தோண்டியிருந்தார். இதுகுறித்து ராபர்ட் கென்னடியும், லோகிதாஸ் மீது புகார் அளித்தார்.

இரு புகார்கள்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், எந்த ஆவணமும் இல்லாமல், கண்ணன் மற்றும் ராபர்ட் கென்னடி இடத்தில் லோகிதாஸ் அத்துமீறி பள்ளம் தோண்டியதும், அதில் கிடைத்த மண்ணை பணத்திற்காக விற்றது ம் தெரியவந்தது.

இதையடுத்து லோகிதாஸை கைது செய்த போலீசார், ஆலந்துார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

Advertisement