ஈமு கோழி மோசடி வழக்கு குற்றவாளி தண்டனை குறைப்பு



தமிழகத்தில், ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில், பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்று மோசடி செய்த நபரின் சிறை தண்டனையை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ல் தமிழகம் முழுதும் நுாற்றுக்கணக்கானவர்களிடம் ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில், கோடிக்கணக்கான ரூபாய் பெற்று, சிலர் மோசடியில் ஈடுபட்டனர்.

இதில், தனித்தனியாக வழக்குகள் விசாரணை நடந்து வந்த நிலையில், ரவி பாலன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

இதற்கு எதிராக, ரவி பாலன் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தை பொறுத்தவரை உங்களை குற்றமற்றவர் என நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், அப்பாவி மக்களை ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் நீங்கள் ஏமாற்றி இருப்பதை அரசு தரப்பு ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறது.


'வேண்டுமானால், தண்டனை குறைப்பு மட்டும் செய்கிறோம்' எனக்கூறி, 10 ஆண்டுகள் விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement