அரசு நல்ல பதில் தராவிட்டால் போராட்டம் தொடரும்: சி.ஐ.டி.யு.,

சென்னை:''அரசிடம் இருந்து நல்ல பதில் வர வேண்டும்; இல்லையென்றால் போராட்டம் தொடரும்,'' என, சி.ஐ.டி.யு., மாநில செயலர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி படி, 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

ஓ ய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், கடந்த 15 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம், தமிழகம் முழுதும் 22 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, வடபழனி பணிமனையில் நேற்று நடந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., மாநில செயலர் சவுந்தரராஜன் பங்கேற்றார்.

பின், அவர் அளித்த பேட்டி:

போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் தொடரும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட, எங்களுக்கு தெரியாதது அல்ல; எங்களால் முடியாததும் அல்ல. பொது மக்கள் நலன் கருதி, அரசுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து, முடிவெடுக்க வேண்டும் என்பதற்குதான் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.

அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பண பலன் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கின்றனர். 10 மாதம் ஓய்வு கால பண பலன் வழங்கப்பட்டது.

மீதமுள்ள, 15 மாத ஓய்வு கால பண பலன்களை எப்போது தருவீர்கள் என கேட்டோம்; தீபாவளிக்குள் தர வேண்டும் என, வலியுறுத்தினோம். இதுதொடர்பாக நிதி துறையிடம் பேசி விட்டு பதில் சொல்வதாக, அமைச்சர் தெரிவித்தார்.

நல்ல பதில் வந்தால் போராட்டம் முடிவுக்கு வரும்; இல்லையென்றால் போராட்டம் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement