பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் எதிர்த்து வழக்கு தாக்கல்
தமிழக போலீஸ் டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, 'பீப்பள்ஸ் வாட்ச்' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விபரம்:
டி.ஜி.பி., பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புதிய டி.ஜி.பி., நியமனம் செய்வது தொடர்பாக, தகுதி வாய்ந்த நபர்களின் பெயரை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு.
ஆனால், அப்படி பெயர்கள் எதையும் தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை; இது நீதிமன்ற அவமதிப்பு. அதோடு இல்லாமல், பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதற்காக, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது
- டில்லி சிறப்பு நிருபர் -