சாத்தையாறு ஓடை அருகே குடியிருப்போர் அச்சம்; குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

மதுரை: மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

லேக் ஏரியா குடியிருப்போர் நலச்சங்க துணைத் தலைவர் சாத்தையா, பொருளாளர் பாண்டியராஜன், நிர்வாகி சுப்பையா அளித்த மனு: லேக்ஏரியா - மாட்டுத்தாவணி இடையே உள்ள சாத்தையாறு ஓடை மழைவெள்ள நீரால், கடந்தாண்டு வெள்ளத்தின்போது லேக் ஏரியா குடியிருப்பு பகுதி அழிவின் விளிம்பு வரை சென்றது. அது மீண்டும் நிகழாமல் தடுக்க புதர் மண்டிய ஓடையை சுத்தம் செய்ய வேண்டும். ஓடையை சரியாக அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதன் அருகே டி.டி.சி., நகருக்கும், சாத்தையாறு ஓடைக்கும் இடையேயுள்ள 400 அடி மண் சுவர் தடுப்பை, கான்கிரீட் சுவராக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த மனு: மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் குளறுபடி, முறைகேடால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. தேர்தலை நடத்த செயலாளராக ராஜ்குமாரை நியமித்தும் அதன்பின் தேர்தல் நடக்கவில்லை. இந்த அமைப்புக்கான பொலிரோ ஜீப்பையும் காணவில்லை. செப்.6 ல் தேர்தல் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அனைத்து உறுப்பினர்களையும் சரிபார்த்து தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வலைசேரிபட்டி சரவணன் அளித்த மனு: ஊராட்சி, நீர்வளத்துறை கண்மாய்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர் வண்டல், களிமண்ணை அள்ளிச்செல்ல அனுமதி வழங்கினர். இதில் விவசாயிகள் பெயரில் பலர் மண்ணை எடுத்து தங்கள் நிலங்களை நெடுஞ்சாலை மட்டத்திற்கு உயர்த்தியுள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொட்டாம்பட்டியில் ரூ.4.9 கோடியில் பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டு, பணிகள் முடியாத நிலையில் திறப்பு விழா நடந்துள்ளது.

மழைக்காலத்தில் இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. உயர்மின் கோபுரங்கள் ஒளிவீசாமல் உள்ளன. கழிவறைகள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement